ECONOMYHEALTHNATIONAL

கை,கால், வாய்ப்புண் நோய் 28 மடங்கு அதிகரிப்பு- மே மாதம் வரை 71,471 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஜூன் 1– கை,கால்,வாய்ப்புண் நோய் சிறார்கள் மத்தியில் தீவிரமாக பரவி வருகிறது. ஜனவரி முதல் மே 30 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 71,471 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்தாண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்நோய்த் தொற்று 28 மடங்கு அதிகரிப்பைக் கண்டுள்ளதாக சுகாதாரத் துறை துணையமைச்சர் 1 டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 91 விழுக்காட்டினர் அல்லது 65,032 பேர் ஆறு வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்களாவர். மேலும் 5,194 பேர் அல்லது 7 விழுக்காட்டினர் ஏழு முதல் 12 வயது வரையிலானவர்கள் என்று அவர் சொன்னார்.

மேலும் 61 விழுக்காடு அல்லது 956 சம்பவங்கள் மழலையர் மற்றும் பாலர் பள்ளிகளிலும் 548 சம்பவங்கள் தனியார் வீடுகளிலும் அடையாளம் காணப்பட்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று இங்கு சிலாங்கூர் மாநில நிலையில் நடத்தப்பட்ட கை,கால்,வாய்ப் புண் நோய் தொடர்பிலான பொது மக்கள் கருத்தைக் கேட்டறியும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாலர் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் இந்நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொது மக்களின் கருத்தைப் பெறுவதற்காக இதுவரை நாடு முழுவதும் 187 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.


Pengarang :