ECONOMYNATIONAL

கோலாலம்பூர்-பாலி இடையே நேரடி விமானச் சேவை- பாத்தேக் ஏர் தொடக்கியது

கோலாலம்பூர், ஜூன் 2- கோலாலம்பூருக்கும் பாலியின் பிரசித்தி பெற்ற டென்பசார் சுற்றுலா மையத்திற்கும் இடையிலான நேரடி விமானச் சேவையை மெலிண்டோ ஏர் என அழைக்கப்பட்ட பாத்தேக் ஏர் விமான நிறுவனம் இன்று தொடக்கியது.

ஒ.டி.306 என்ற பயண குறியீட்டைக் கொண்ட அந்த விமானம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இன்று காலை 9.10 மணியளவில் புறப்பட்டு டென்பசார் இங்குரா ராய் அனைத்துலக விமான நிலையத்தை பிற்பகல் 12.15 மணியளவில் சென்றடைந்தது.

டென்பசாருக்கான பயணச் சேவை மீண்டும் நிலைநிறுத்தப்படுகிறது. கடந்த மார்ச் 27 ஆம் தேதி முதல் ஜாகர்த்தாவுக்கு வாரம் இரு முறை என்ற அடிப்படையில் இந்தோனேசியாவுக்கான பயணச் சேவையை பாதேக்  ஏர் அதிகரித்துள்ளது என்று அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

அனைத்துலக எல்லைகள் திறக்கப்பட்டு பயணக் கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுள்ள நிலையில் அனைத்துலக விமானச் சேவைகளுக்கு ஏற்பட்டுள்ள தேவை அதிகரிப்பை ஈடுசெய்வதற்கான நடவடிக்கையில் பாத்தேக் ஏர் தொடர்ந்து ஈடுபடும் என்று அதன் தலைமை செயல் முறை அதிகாரி கேப்டன் முஸ்தாபிஷ் முஸ்தாபா பக்ரி கூறினார்.

பெருந்தொற்றுப் பரவலுக்கு முன்னர் பாலி நகருக்கான தடம் எங்கள் நிறுவனத்தின் அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு வழித்தடமாக இருந்தது. இத்தடத்திற்கான பயணச் சேவை மீண்டும் நிலைநிறுத்தப்பட்டதன் மூலம் பாலி செல்வோரின் எண்ணிக்கையை கணிசமான அளவு அதிகரிக்க இயலும் என்றார் அவர்.

இந்தியா, நேப்பாளம் மற்றும் வங்காளதேசத்திலிருந்து வரும் பயணிகளுக்கு பாலி மற்றும் ஆஸ்திரேலியா செல்வதற்கான கூடுதல் இணைப்பு சேவையாக இந்த தடம் விளங்கும் எனவும் அவர் சொன்னார்.


Pengarang :