MEDIA STATEMENT

சொத்து பிரச்சனையில் தாயை  வெட்டிக் கொன்ற மகன்

ஈப்போ, ஜூன் 5- பாரிட் புந்தாரில் உள்ள தாமான் கிரியனில் உள்ள ஒரு வீட்டில் தனது தாயைக் கொன்று அவரது உடலை சிதைத்ததாகக் கூறப்படும் நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிற்பகல் 3.30 மணியளவில் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் வெட்டப்பட்ட மனித உறுப்புகளின் துண்டுகள் கண்டு பிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து 42 வயதான நபர் கைது செய்யப் பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் கூறினார்.

“பேராக் கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் பிரிவின் உதவியுடன் கிரியான் மாவட்ட காவல்துறை தலைமையகத்திலிருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று, வெட்டப்பட்ட 15 உடல் பாகங்களைக் கண்டெடுத்தது,” என்று அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் கூறினார்.

உயிரிழந்த பெண் 68 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டதாகவும், அவர் கணவர் இறந்து கடந்த 12 வருடங்களாக அந்த வீட்டில் சந்தேக நபருடன் வசித்து வந்ததாகவும் அவர் கூறினார்.

மியோர் ஃபரிடலாத்ராஷின் படி, முதற்கட்ட விசாரணையில், மறைந்த தந்தையின் சொத்தை பிரிப்பது தொடர்பாக சந்தேகநபருக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகவும், விசாரணையில் உதவுவதற்காக சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

கொலைக்கு சந்தேக நபர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு பாராங் கத்தி, இரண்டு கத்திகள் மற்றும் பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.


Pengarang :