ECONOMYNATIONAL

கடப்பிதழ்கள் கையிருப்பு போதுமான அளவு உள்ளது- குடிநுழைவுத் துறை உத்தரவாதம்

புத்ராஜெயா, ஜூன் 9- நாட்டில் குறிப்பாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள குடிநுழைவுத் துறை அலுவலகங்களில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுவதற்கு கடப்பிதழ்கள் பற்றாக்குறை காரணம் அல்ல. மாறாக, புதிய அனைத்துலக கடப்பிதழ்களுக்கு விண்ணப்பம் செய்வோர் மற்றும் அவற்றை புதுப்பிப்போர் எண்ணிக்கை அபரிமித உயர்வு கண்டதே இதற்கு காரணமாகும்.

புதிய கடப்பிதழ்களுக்கு விண்ணப்பம் செய்வோர் மற்றும் புதுப்பிப்போர் எண்ணிக்கை 65 விழுக்காடு வரை உயர்வு கண்டுள்ளதால் நாட்டில் குறிப்பாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள குடிநுழைவுத் துறை அலுவலகங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ கைருள் ஜைமி டாவுட் கூறினார்.

குடிநுழைவுத் துறையின் வசம் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கடப்பிதழ்கள் உள்ளதால் அபரிமிதமாக உயர்வு கண்டு வரும் அந்த ஆவணத்திற்கான தேவையை ஈடு செய்ய முடியும் என அவர் சொன்னார்.

எங்களிடம் போதுமான அளவு கடப்பிதழ்கள் உள்ளன. சேமிப்பு கிடங்கில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கடப்பிதழ்கள் இருக்கின்றன. அவை தீர்ந்து விடும் பட்சத்தில் விநியோகிப்பாளர்கள் மூலம் கையிருப்பை அதிகரிப்போம் என்று அவர் குறிப்பிட்டார்.

கடப்பிதழ்களுக்கு விண்ணப்பம் செய்ய அனைவரும் காலை வேளையில் அலுவலகம் வருவது நெரிசல் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகும் என அவர் சொன்னார்.

உதாரணத்திற்கு, ஷா ஆலமில் உள்ள குடிநுழைவுத் துறை அலுவலகம் மிகவும் சிறியது.

கடப்பிதழுக்கு விண்ணப்பம் செய்வோர் காலை வேளையில் அதிகமாக வருகின்றனர். மாலை நேரத்திலும் அவர்கள் வரலாம் என்றார் அவர்.


Pengarang :