ECONOMYNATIONAL

டோப் குளோவ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் 98.6 விழுக்காடு சரிவு

கோலாலம்பூர், ஜூன் 9- உலகின் மிகப்பெரிய மருத்துவ கையுறை தயாரிப்பு நிறுவனமான டோப் குளோவ் கார்ப்பரேஷனின் லாபம் மூன்றாம் காலாண்டில் 98.6 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.

கையுறைப் பொருள்களுக்கான தேவை குறைந்தது மற்றும் உற்பத்தி செலவினம் அதிகரித்தது ஆகிய காரணங்களால் அந்நிறுவனத்தின் லாபம் பெருமளவு குறைந்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று உச்சத்தில் இருந்த போது பெரும் லாபத்தை ஈட்டிய அந்நிறுவனம் தற்போது நிலவி வரும் மிதமான தேவை காரணமாக தற்போதைக்கு மூலதன செலவினத்தைக் குறைத்துள்ளது அல்லது ஒத்தி வைத்துள்ளது.

இவ்வாண்டு மே மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் அந்நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 2 கோடியே 93 லட்சம் வெள்ளியாக குறைந்தது. கடந்தாண்டின் இதே காலக்கட்டத்தில் அந்நிறுவனம் 206 கோடி வெள்ளியை லாபமாக பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டின் மூன்றாம் காலாண்டில் 416 கோடி வெள்ளியாக இருந்த அந்நிறுவனத்தின் வருமானமும் இவ்வாண்டில் 146 கோடி வெள்ளியாக சரிவு கண்டது.

உலகளாவிய நிலையிலான பணவீக்கம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின் கட்டண உயர்வு, மலேசியாவில் குறைந்தபட்ச சம்பள விகிதம் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் உற்பத்தி செலவினம் அதிகரித்தாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளின் விலையும் 53 விழுக்காடு வீழ்ச்சி கண்டது.


Pengarang :