ECONOMYSELANGOR

பொருள் விலையேற்றம் கண்டாலும் மலிவு விற்பனையை தொடர்ந்து நடத்த முடியும்- பி.கே.பி.எஸ். நம்பிக்கை

ஷா ஆலம் ஜூன் 13– சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தி வரும் மலிவு விலை விற்பனைத் திட்டத்தின் வாயிலாக அடிப்படை உணவுப் பொருள்கள் சந்தையை விட குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்தில் உணவுப் பொருள்களுக்கு 20 முதல் 25 விழுக்காடு வரை விலைக் கழிவு வழங்குவதன் மூலம் சந்தையில் கச்சா பொருள்களின் விலை ஏற்றம் கண்டாலும் அதனை சமாளிப்பதற்குரிய ஆற்றலை பி.கே.பி.எஸ். கொண்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அதன் தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி கூறினார்.

மலிவு விற்பனையை அடிப்படையாகக்  கொண்ட இத்திட்டத்தின் வாயிலாக கோழி, முட்டை, காய்கறி போன்றவற்றை குறைந்த விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பு பொது மக்களுக்கு கிட்டுவதாக அவர் சொன்னார்.

கோழிகள் பூரண வளர்ச்சி பெறும் ஒவ்வொரு 32 நாள் காலக்கட்டத்திலும் நாங்கள் 500,000 கோழிகளை சந்தைக்கு அனுப்பி கிலோ 8.00 வெள்ளி விலையில் விற்கிறோம். குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினரைப் பொறுத்த வரை இத்திட்டம் வெற்றிகரமான மற்றும் பொருள் பொதிந்த ஒன்றாக விளங்குகிறது என்றார் அவர்.

ஆஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்ட “உணவு பாதுகாப்பு- ஸ்ரீ கெம்பாங்கான், சிலாங்கூர் மொத்த விற்பனை சந்தையில் மோசமான உணவு நெருக்கடியை சமாளிப்பது“ எனும் தலைப்பிலான விவாத நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

லாபம் சம்பாதிப்பது மட்டும் தங்கள் துறையின் நோக்கம் அல்ல என்றும் மாறாக, மக்களின் சுமையைக் குறைப்பதும் தங்களின் கடமையாக உள்ளது என்று முகமது கைரில் சொன்னார்.

அதன் காரணமாகவே நாங்கள் மக்களை நாடி வருகிறோம். எங்களுக்கு கிடைத்த லாபத்தை மக்களுக்கே திருப்பித் தர விரும்புகிறோம் என்றார் அவர்.


Pengarang :