ECONOMYNATIONALPENDIDIKAN

நூலகங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவீர், படைப்பாளர் அறவாரியம் அமைப்பீர்- அன்வார் கோரிக்கை

ஷா ஆலம், ஜூன் 13- சமூகத்தில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிப்பதற்கு ஏதுவாக நாட்டிலுள்ள நூலகங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டிலுள்ள படைப்பாளர்கள் குறிப்பாக, இலக்கியவாதிகளுக்கு உதவும் வகையில் படைப்பாளர்கள் அறவாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

நாகரீகம் அடைந்த சமூகத்தை அடைய நாம் இதனை அவசியம் செய்தாக வேண்டும். பொருளாதாரம் மற்றும் கலாசாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதனை அடைய முடியும் என்றார் அவர்.

இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக வாணிக மையத்தில் நடைபெற்று வரும் கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவில் இடம் பெற்றுள்ள பெவிலியன் சிலாங்கூர் காட்சிக்கூடத்தை பார்வையிட்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ அன்வாரின் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஜிசா வான் இஸ்மாயில், சிலாங்கூர் பொது நூலக கழகத்தின் தலைவர் டத்தின் படுகா மஸ்துரா முகமது ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தேசிய இலக்கியவாதி ஏ.சைட் சமாட் எழுதிய 65 ஆண்டு கால மெர்டேக்கா தொடர்பான புத்தகத்தையும் அன்வார் இந்நிகழ்வில் வெளியிட்டார்.


Pengarang :