ECONOMYNATIONAL

மலாய் மொழியை மேன்மைப்படுத்துவோம்- பிற மொழி கற்க ஊக்குவிப்போம்- அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 13– நாட்டிலுள்ள தலைவர்கள் மலாய் மொழியை மேன்மைப்படுத்துவோம் என்ற சுலோகத்தை மட்டும் சதா முழங்கிக் கொண்டிருக்கக் கூடாது. மாறாக அந்நோக்கத்தை அடைய புத்தக விழாக்களை அவர்கள் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

மலாய் மொழியை மேன்மைப்படுத்துவதற்கு சுலோகம் மட்டும் போதாது. உண்மையில் அவ்வாறு செய்வதாக இருந்தால் புத்தக விழாக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில் டேவான் பகாசா டான் புஸ்தாக்காவை நாட்டின் முக்கிய தளமாக உருவாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவருமான அவர் சொன்னார்.

இவ்வாறு செய்வதன் மூலம் மலாய் மொழியை சமயம், சித்தாந்தம், தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் உயர் அறிவாற்றல் கொண்ட மற்றும் மதிக்கக்கூடிய மொழியாக உருவாக்க முடியும். மலிவான சுலோகங்களால் இதனை அடைய முடியாது என்றார் அவர்.

கோலாலம்பூர் வாணிக மையத்தில் நடைபெற்று வரும் அனைத்துலக புத்தக விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  தேசிய இலக்கியவாதி ஏ.சமாட் சைட்டின் 65 ஆண்டுகால மெர்டேக்கா தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு தொடர்ந்து மேம்பாடு காண்பதற்கு ஏதுவாக மலாய் மொழி தவிர்த்து இதர மொழிகளையும் கற்றுக் கொள்ளும்படி இளைஞர்களை அனைத்துலக இஸ்லாமிய சிந்தனைக் கழகத்தின் நிறைநிலைத் தலைவருமான அன்வார் வலியுறுத்தினார்.

மலாய் மொழியை மேன்மைப்படுத்துவது என்பது ஆங்கிலத்தை சிறுமைப்படுத்துவது என்ற குறுகிய கண்ணோட்டத்தை கொண்டிருப்பதைக் காண நான் விரும்பவில்லை என்றார் அவர்.


Pengarang :