ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூர் சாரிங்- இளைஞர்கள் மத்தியில் கொலாஸ்ட்ரோல் அளவு அதிகம் காணப்படுகிறது

கோல சிலாங்கூர், ஜூன் 12  – “சிலாங்கூர் சாரிங்” திட்டத்தில் பங்கேற்ற  25 வயது முதல் 40 வயது வரையிலான  பெரும்பாலானோர் மத்தியில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்கள் உடல் தகுதியுடனும்  சாதாரண உடல் நிறை குறியீட்டு எண்ணுடனும் (பி.எம்.ஐ). இருந்தாலும்  கொலாஸ்ட்ரோல் அளவு கவலையளிக்கும் வகையில் உள்ளதாக சிலாங்கூர் பொது சுகாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.

இது, பல தொகுதிகளில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ  சோதனைகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது. சுறுசுறுப்பான  இளைஞர்களிடம் அதிக கொலஸ்ட்ரால் அளவு கண்டறியப்பட்டது.

பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இது போன்ற சுகாதாரப் பரிசோதனைகளின் முக்கியத்துவத்தை  எங்களால் உணர முடிகிறது. இரத்தப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வது வரவேற்கத்தக்கது. அதன் மூலம் கடுமையான நோய் அபாயங்களைக் கண்டறிய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

நேற்று,  கம்போங் ஸ்ரீ திராம் சமூக மண்டபத்தில் நடைபெற்ற  சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனை இயக்கத்தின் போது சிலாங்கூர் கினியிடம் அவர் இதனைக் கூறினார்.

வயது வரம்பின்றி அனைவரும்  உடல்நிலையை அறிந்து கொள்ள மாநில அரசின் இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார்.

உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுவோர்  உட்பட அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவர்களுக்கு ஏதேனும் நோய் இருப்பது கண்டறியப்பட்டால், மேலும், நிலைமை மோசமடைவதற்கு முன்பு உரிய சிகிச்சையளிக்க  விரும்புகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் சாரிங் திட்டத்திற்கு மாநில அரசாங்கம் 34 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 39,000 பேர் வரை பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த இலவச பரிசோதனைத் திட்டத்தில் பொதுவான உடல் பரிசோதனை, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, கண் பரிசோதனை, புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.


Pengarang :