ECONOMYNATIONAL

நாட்டில் அதிகரித்து வரும் ஊழல்- விரைந்து நடவடிக்கை எடுக்க பக்கத்தான் கூட்டணி வலியுறுத்து

ஷா ஆலம், ஜூன் 14– நாட்டில் ஊழல் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது குறித்து பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கவலையும் சினமும் அடைந்துள்ளது.

சத்து மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட் (1எம்டிபி) இயக்குநர் வாரிய உறுப்பினர் என்ற முறையில் முன்னாள் அரசாங்கத் தலைமைச் செயலாளர் மாதம் 30,000 வெள்ளியை வருமானமாக பெற்று வந்தது தொடர்பில் ஆக சமீபத்தில் வெளியான செய்தியை அது சுட்டிக் காட்டியது.

1எம்டிபி இயக்குநர் வாரியக் கூட்டம் நடைபெறாத போதிலும் தாம் மாதந்தோறும் அந்த கட்டணத்தைப் பெற்று வந்ததாக டான்ஸ்ரீ முகமது சீடேக் ஹசான் கூறியிருந்தார்.

முகமது சீடேக்கின் இந்த வாக்குமூலம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

ஏனென்றால், 1எம்டிபி யிடமிருந்து அவர் கட்டணம் பெற்ற போது அரசாங்கத் தலைமைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார் என பக்கத்தான் தலைவர் மன்றம் தெரிவித்தது.

மேலும் வேதனையைக் தரக்கூடிய மற்றொரு செய்தி என்னவென்றால் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி  மாதந்தோறும் 63,543 வெள்ளி முதல் 16 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை பெற்று வந்ததுதான்.

இது தவிர, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் ரெம்பாவ் அம்னோ டிவிஷன் வாயிலாக வெ. 50,000 முதல் வெ. 200,000 வரை பெற்றதாக அல்ட்ரா கிரானா சென்.பெர்ஹாட் நிறுவன முன்னாள் இயக்குநர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இவ்விரு சம்பவங்களும் மிகவும் வேதனையளிக்கும் வகையில் உள்ளன. இந்த ஊழல் நடவடிக்கைகளில் அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பொதுச் சேவைத் துறையில் முக்கிய பொறுப்பை வகிப்பவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ஊழலை துடைத்தொழிப்பதில் தங்களின் கடப்பாட்டை பக்கத்தான் கூட்டணி மறு உறுதிப்படுத்த விரும்புகிறது. ஆகவே, சில நடவடிக்கைகளையும் சீர்திருத்தங்களையும் அரசாங்கம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

அரசியல் நிதியளிப்புச் சட்ட மசோதாவை வரைவது மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வருவது ஆகியவையும் அதில் அடங்கும் என பக்கத்தான் தலைவர் மன்றம் கூறியது.


Pengarang :