ECONOMYSELANGOR

வேலை வாய்ப்பு கண்காட்சி வழி அதிகமானோருக்கு உதவ யு.பி.பி.எஸ். திட்டம்

ஷா ஆலம், ஜூன் 15– சிலாங்கூர் மாநில மக்களுக்கு குறிப்பாக, வேலை தேடுவோருக்கு உதவும் வகையில் பெரிய அளவில் வேலை வாய்ப்புக் கண்காட்சியை ஏற்பாடு செய்ய சிலாங்கூர் தொழிலாளர் திறனளிப்பு பிரிவு (யு.பி.பி.எஸ்.) திட்டமிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜோப்கேர் பயணத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த உத்தேசத் திட்டத்தை தாங்கள் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவிடம் முன்வைக்கவுள்ளதாக அப்பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஜயன் கூறினார்.

இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி ஹைப்ரிட் முறையில் நடத்தப்படும். அதாவது வேலை தேடுவோர் நேர்காணல் நடைபெறும் இடங்களுக்கு நேரில் வரலாம் அல்லது இயங்கலை வாயிலாக நேர்காணலில் பங்கு கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.

தற்போது நடைபெறும் ஜோப்கேர் திட்டத்தில் 20 முதலாளிகள் பங்கேற்றுள்ள வேளையில் உத்தேச வேலை வாய்ப்பு கண்காட்சியில் அதிகமான முதலாளிகளின் பங்கேற்புடன் அதிகமான வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்றார் அவர்.

வேலையில்லாதோர் எண்ணிக்கையை 2.8 விழுக்காடாக குறைப்பதில் யு.பி.பி.எஸ். உதவினால் அதுவே சிறப்பான அடைவுநிலையாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கி ஜோப்கேர் வேலை வாய்ப்பு பயணத் திட்டத்தை ஒன்பது மாவட்டங்களில் யு.பி.பி.எஸ். கட்டம் கட்டமாக மேற்கொண்டு வருகிறது.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட குறைந்த, மத்திய மற்றும் உயர்தொழில் திறன் கொண்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நோக்கிலான இத்திட்டத்தை சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப் நிறுவனத்துடன் இணைந்து யு.பி.பி.எஸ். ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தில் பங்கேற்றுள்ள 15 நிறுவனங்கள் சுமார் 3,000 வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.


Pengarang :