ECONOMY

சுபாங் ஜெயாவில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சோதனையில் 13 அந்நிய நாட்டினர் கைது- 7 குற்றப்பதிவுகள் வெளியீடு

ஷா ஆலம், ஜூன் 17– இங்குள்ள பங்சாபுரி அங்சானா யு.எஸ்.ஜே.1 பகுதியில் குடிநுழைவுத்துறையுடன் இணைந்து சுபாங் ஜெயா மாநகர் மன்றம் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக ஏழு குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன.

லைசென்ஸ் இன்றி வர்த்தகத்தில் ஈடுபட்டது, பொருள்களை பொது இடங்களில் வைத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்த குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் அஸ்பரிஸால் அப்துல் ரஷிட் கூறினார்.

இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது அப்பகுதியிலுள்ள 32 வணிக மையங்கள் சோதனையிடப்பட்டதாகவும் அதில் சில லைசென்ஸ் இன்றி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கையின் போது செல்லத்தக்க பயணப் பத்திரங்களைக் கொண்டிராத 13 சட்டவிரோதக் குடியேறிகளை குடிநுழைவுத் துறை கைது செய்தனர் என்றும் அவர் சொன்னார்.

இத்தகைய சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனக் கூறிய அவர், விதிமுறை மீறும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.


Pengarang :