MEDIA STATEMENTNATIONAL

சாலை விபத்தில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் காயம்

கோலாலம்பூர், ஜூன் 18- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) 425.3 வது கிலோ மீட்டரில் புக்கிட் பெருந்தோங் அருகே நேற்று காலை நிகழ்நத சாலை விபத்தில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் காயமடைந்தார்.

அந்த விபத்தில் லேசான காயங்களுக்குள்ளான ராயர், சுங்கை பூலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றப் பின்னர் மாலை 5.00 மணியளவில் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக அவரின் சிறப்பு அதிகாரி எஸ்.கிருபா பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இந்த விபத்தில் ராயர் வலது கை மற்றும் கழுத்தில் காயங்களுக்குள்ளானார். மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார் என அவர் சொன்னார்.

மூன்று பயணிகள் மற்றும் ஓட்டுநருடன் ராயர் பயணித்த டோயோட்டா அல்பார்ட் ரக வாகனம் நேற்று காலை 8.55 மணியளவில் விபத்தில் சிக்கியதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரண்டெண்டன் கமாருடின் அறிக்கை ஒன்றில் கூறினார்.

நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த போர்ட் குகா ரக வாகனம் சாலையில் கிடந்த பொருளை பொருளை மோதுவதிலிருந்து தவிர்க்கும் நோக்கில் திடீரென தடத்தை மாற்ற முயன்ற போது, அதே முயற்சியை மேற்கொண்ட ராயர் பயணம் செய்த டோயோட்டா அல்பார்ட் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக அவர் தெரிவித்தார்.

விபத்து ஏற்படும் அளவுக்கு கவனக் குறைவாக வாகனம் ஓட்டியது தொடர்பில் 1959ஆம்  ஆண்டு சாலை விதிகளின் 10வது ஷரத்தின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :