ECONOMYSELANGOR

உலு லங்காட் மாவட்டத்தில் 14 தொழில்முனைவோர் வர்த்தக உபகரண உதவி நிதி பெற்றனர்

உலு லங்காட், ஜூன் 20- சிலாங்கூர் சிறுதொழில் முனைவோர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் கோல லங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த 14 தொழில்முனைவோர் வர்த்தக உபகரணங்களுக்கான உதவித் தொகையைப் பெற்றனர்.

சம்பந்தப்பட்ட தொழில்முனைவோருக்கு  உபகரணங்களை வழங்குவதற்காக 249,128 வெள்ளி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதற்கும் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் ஏதுவாக அவர்களுக்கு கூடுதல் பட்சம் 30,000 வெள்ளி வரையிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட வணிகர்கள் இந்த உதவியைக் கொண்டு சிறப்பான முறையில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் அதே வேளையில் இணையம் மூலம் வர்த்தகம் புரிவதை ஒரு கலாசாரமாகவும் ஆக்கிக் கொள்வர் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள அம்பாங், தாமான் கோசாஸில் சம்பந்தப்பட்ட தொழில்முனைவோரிடம் உதவித் தொகைக்கான மாதிரி காசோலைகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநிலத்திலுள்ள அனைத்து ஒன்பது மாவட்டங்களிலும் இந்த வர்த்தக உபகரண உதவித் திட்டத்தை அமல்படுத்துவதற்கு மாநில அரசு 20 லட்சம் முதல் 25 லட்சம் வெள்ளி வரை நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் கீழ்க்கண்ட தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்-

– சிலாங்கூரில் பிறந்தவர்களாக அல்லது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்

– குறைந்தது ஈராண்டு காலமாக வியாபாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வர வேண்டும்.

– மொத்த வர்த்தக மதிப்பு மூன்று லட்சம் வெள்ளிக்கும் மேற்போகாமல் இருக்க வேண்டும்.

-குறைந்தது இரண்டு முதல் ஐந்து தொழிலாளர்களைக் கொண்டிருக்க வேண்டும்.

– 18 முதல் 60 வயது வரையிலானவர்களாக இருக்க வேண்டும்

– மலேசிய நிறுவன ஆணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

– பகுதி நேர அல்லது முழு நேர வியாபாரமாக இருக்கலாம்.


Pengarang :