ECONOMYPENDIDIKANSELANGOR

உலு லங்காட் மாவட்டத்தில் பள்ளிகளைச் சீரமைக்க வெ.20 லட்சம் ஒதுக்கீடு

அம்பாங், ஜூன் 20- இவ்வாண்டில் உலு லங்காட் மாவட்டத்திலுள்ள பள்ளிகளைச் சீரமைக்க மாநில அரசு 20 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது
அந்த மாவட்டத்திலுள்ள 77 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நிதியுதவி, கல்விக் கூடங்களை தரம் உயர்த்துவதில் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டைப் புலப்படுத்தும் வகையில் உள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சொன்னார்.

இந்த நிதியுதவி இம்முறை சமயப்பள்ளிகள், தேசியப் பள்ளிகள் மற்றும் தேசிய இடைநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளுக்கு பிறிதொரு நாளில் மானியம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஹாஜ்ஜூக் கடமையை நிறைவேற்றவிருக்கும் 24 பேருக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதனிடையே, இரு மாதங்களுக்கு முன்னர் மானியம் கோரி தாங்கள் செய்த விண்ணப்பத்தை மந்திரி புசார் அலுவலகம் இவ்வளவு விரைவாக பரிசீலிக்கும்  எனத் தாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று லெம்பா கிராமாட் தேசிய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டத்தோஸ்ரீ ஜைனோல் அபிடின் முகமது கூறினார்.

அப்பள்ளியில் பயிலும் சுமார் 1,400 மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்களை அமல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.


Pengarang :