ECONOMYSELANGOR

அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் “பிளாட்ஸ்“ திட்டத்தில் 20,000 பேர் வரை இணைவர்

உலு லங்காட், ஜூன் 20- அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் பிளாட்பார்ம் சிலாங்கூர் (பிளாட்ஸ்) திட்டத்தில் இருபதாயிரம் பேர் வரை இணைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊராட்சி மன்றங்கள் உள்பட பல்வேறு தரப்பினருடன் தாங்கள் நல்கி வரும் ஒத்துழைப்பின் காரணமாக இந்த இலக்கை அடைய முடியும் என்று பெர்மோடலான் நெகிரி சிலாங்கூர் பெர்ஹாட் (பி.என்.எஸ்.பி.) தலைமை செயல்முறை அதிகாரி ராஜா அகமது ஷாரிர் இஸ்கந்தார் ராஜா சலீம் கூறினார்.

வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய மற்றும் வர்த்தக லைசென்ஸ் பெற விரும்பும் வணிகர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஊராட்சி மன்றங்கள் நேரடியாக ஈடுபடும் என்று அவர் தெரிவித்தார்.

வர்த்தகர்களுக்கு பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுத் தரும் நோக்கில் ஊராட்சி மன்றங்கள் வர்த்தக மற்றும் கணினி பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று அம்பாங் தாமான் கோசாஸில் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தில் கலந்து கொண்ட போது செய்தியாளர்களிடம்  அவர் இதனைக் கூறினார்.

இவ்வாண்டு மே மாதம் வரை மாநிலம் முழுவதுமிருந்து 10,116 வணிகர்கள் பிளாட்ஸ் திட்டத்தில் பங்கேற்று பொருள்களை சந்தைப்படுத்துவது உள்ளிட்ட வர்த்தக யுக்திகளைக் கற்றுக் கொண்டனர் என்றார் அவர்.


Pengarang :