ECONOMYHEALTHNATIONAL

இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு “பிக்கிட்ஸ்“ தடுப்பூசித் திட்டம் மீண்டும் அமல்

புத்ரா ஜெயா, ஜூன் 20– நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக “பிக்கிட்ஸ்“ எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் இன்று தொடங்கி வரும் 24 ஆம் தேதி வரை மீண்டும் அமல்படுத்தப்படும்.

இம்மாதம் 16ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட “அனைவருக்கும் ஆயுள் முழுவதும் பாதுகாப்பு“ எனும் கருப்பொருளிலான நோய்த் தடுப்பு வாரத்தையொட்டி இந்த தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.

இதற்கு முன் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்புகளை நழுவ விட்டு தற்போது தற்போது அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டும் பெற்றோர்களை கௌரவிக்கும் விதமாகவும் நோய்த் தொற்றிலிருந்து சிறார்களைப் பாதுகாப்பதில் சுகாதார அமைச்சின் பரிவைக் புலப்படுத்தும் விதமாகவும் இந்த தடுப்பூசி திட்டம் அமல் படுத்தப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி பெற விரும்பும் பெற்றோர்கள் நாளை தொடங்கி வரும் வெள்ளிக் கிழமை வரை சுகாதார அமைச்சின் அனைத்து கிளினிக்குகளிலும் வருகைக்கான முன்பதிவின்றி தடுப்பூசி பெறலாம் என்று அவர் தெரிவித்தார்.

கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் குறித்து தற்போதுதான் தெரியவந்த பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி பெற இப்போதுதான் முடிவெடுத்தவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :