ECONOMY

முன்னாள் தூதர் டத்தோ பரமேஸ்வரன் மறைவு-பேரரசர் தம்பதியர் அனுதாபம்

கோலாலம்பூர், ஜூன் 20 –  மறைந்த முன்னாள் தூதர் டத்தோ என். பரமேஸ்வரன் குடும்பத்தினருக்கு  மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா தம்பதியர்  ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொண்டனர்.

அன்னாரின் மறைவை அறிந்து தாங்கள்  வருத்தம் அடைவதாகவும் இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர்  உறுதியுடன் இருப்பர் என்று நம்புவதாகவும் இன்று இஸ்தானா நெகாரா வெளியிட்ட முகநூல் பதிவில் சுல்தான் அப்துல்லா குறிப்பிட்டார்.

நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு, சேவை மற்றும் தியாகத்தை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். அவரது மறைவு வெளியுறவு அமைச்சுக்கு (விஸ்மா புத்ரா) பெரும் இழப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

74 வயதான பரமேஸ்வரன், அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியா உட்பட பல நாடுகளில் தூதரக அதிகாரியாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய அனுபவம் கொண்டவராவார்.

மேலும், கடந்த  2003 முதல் 2010 வரை சிங்கப்பூருக்கான மலேசிய தூதராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

கடந்த 1986 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபைக்கான மலேசியாவின் துணை நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட பரமேஸ்வரன், 1990 இல் வியட்நாம் நாட்டிற்கான மலேசியாவின் தூதராக பொறுப்பேற்றார்.

 


Pengarang :