ECONOMYNATIONAL

கிரேடல் ஃபண்ட் சி.இ.ஒ. படுகொலை வழக்கு- முன்னாள் மனைவி, இரு இளையோர் விடுதலை

ஷா ஆலம், ஜூன் 21– கிரேடல் ஃபண்ட் தலைமை செயல் முறை அதிகாரியை படுகொலை செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அவரின் முன்னாள் மனைவியும் இரு பதின்ம வயதினரும் விடுவிக்கப்பட்டனர்.

நஸ்ரின் ஹசான் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டிலிருந்து அம்மூவரையும் ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று விடுவித்ததாக பெர்னாமா தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302 மற்றும் அதே சட்டத்தின் 34வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை அம்மூவரும் எதிர்நோக்கியிருந்தனர்.

அம்மூவரும் குற்றம் புரிந்ததை நிரூபிப்பதற்கான அடிப்படை முகாந்திரம் எதுவும் இந்த வழக்கில் காணப்படவில்லை என்று நீதிபதி டத்தோ அப்துல் கரீம் அப்துல் ரஹ்மான் தனது தீர்ப்பில் கூறினார்.

எதிர்வாதம் புரிய அழைக்கப்படாமல் அம்மூவரும் விடுவிக்கப்படுவதாக நீதிபதி மேலும் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கும் மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கும் இடையே முத்தியாரா டாமன்சாரா, முத்தியாரா ஹோம்சில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக 47 வயதான சமிரா முஸபார், இரு இளையோர் மற்றும் இன்னும் தலைமறைவாக இருந்து வரும் எக்கா வாஹ்யு லெஸ்தாரி என்ற இந்தோனேசிய  மாது ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.


Pengarang :