ECONOMYSELANGOR

மத்திய அரசுத் துறை இயக்குநர்களுடன் மந்திரி புசார் சந்திப்பு

ஷா ஆலம், ஜூன் 21– சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஐந்து கூட்டரசு துறைகளின் இயக்குநர்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று இங்குள்ள தமது அலுவலகத்தில் சந்தித்தார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு நீடித்த இந்த மரியாதை நிமித்த சந்திப்பில் ஐ.சி.யு. எனப்படும் ஒருங்கிணைப்பு மற்றும் அமலாக்கப் பிரிவு, தேசிய கணக்காய்வுத் துறை, மலேசிய புள்ளிவிபரத் துறை, மாநில தகவல் துறை மற்றும் மாநில கல்வித் துறைகளின் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடு கடந்த ஈராண்டு காலமாக பெரும் சவாலை எதிர்நோக்கியிருந்த காலக்கட்டத்தில் இத்துறைகளுடன் ஏற்பட்ட அணுக்கமான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இச்சந்திப்பு நடத்தப்பட்டதாக அமிருடின் சொன்னார்.

அந்த நெருக்கடியான காலக்கட்டத்தில்தான் இந்த துறைகளைப் பற்றி முன்பை விட அதிகமாக தெரிந்து கொள்வதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டது. மக்களுக்கான உதவித் திட்டங்களை மேற்கொள்வதில் பெரிதும் துணை புரியக்கூடிய இந்த ஒத்துழைப்பை நான் பெரிதும் வரவேற்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

டியூஷன் ராக்யாட் சிலாங்கூர், பெடுலி சிஸ்வா, பித்தாரா யாயாசான் சிலாங்கூர் திட்டங்களை விரிவாக்கம் செய்வதற்கு ஏதுவாக மேலும் அதிகமான உயர்கல்விக் கூடங்களை அடையாளம் காண மாநில கல்வித் துறை துணை புரியும் என அவர் சொன்னர்.

அதே சமயம், மாநில அரசின் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டுச் சேர்ப்பதில் தகவல் இலாகா உரிய பங்களிப்பை வழங்க முடியும் என்றார் அவர்.


Pengarang :