ECONOMYNATIONAL

கோழிப் பண்ணை தொழில் துறை உற்பத்தியை கூடியபட்ச அளவுக்கு அதிகரிக்கும்

அலோர் ஸ்டார், ஜூன் 21– நாடு கோழிப் பற்றாக்குறைப் பிரச்னையை எதிர்நோக்காமலிருப்பதை உறுதி செய்ய கோழிப் பண்ணைத் தொழில்துறையினர் உற்பத்தியை கூடிய பட்ச அளவுக்கு உயர்த்தவுள்ளனர்.

இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு அதாவது, நாடு கோழிப் பற்றாக்குறைப் பிரச்னையை எதிர்நோக்குவதற்கு முன்னர் நாட்டின் கோழி உற்பத்தி 106 விழுக்காட்டை எட்டியதாக விவசாயம் மற்றும் உணவுத் தொழிலியல் அமைச்சர் டத்தோஸ்ரீ ரோனால்ட் கியாண்டே கூறினார்.

முன்பு நாட்டில் கோழி உற்பத்தி ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்த்தப்பட்ட அளவில் இருந்தது. எனினும், நோய்ப் பரவல், தேவை அதிகரிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கோழி விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

வரும் ஜூலை மாதம் முதல் தேதி தொடங்கி கோழியின் விலை சந்தை நிலவரத்திற்கேற்ப நிர்ணயிக்கப்படுவதற்கு முன்னர் தினசரி 18 லட்சம் முதல் 20 லட்சம்  கோழிகளுக்கான தேவையை நிறைவு செய்தாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளுக்கு கோழி ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றுவது தொடர்பில் பரிசீலிப்பதற்கு முன்னர் உள்நாட்டில் கோழி விநியோகத்தை அமைச்சு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :