ECONOMYNATIONAL

கோழி, முட்டை, சமையல் எண்ணெய்க்கான உச்சவரம்பு விலை ஜூலை 1ஆம் தேதி அகற்றப்படுகிறது

புத்ரா ஜெயா, ஜூன் 22– கோழி, முட்டை மற்றும் இரண்டு,மூன்று, ஐந்து கிலோ போத்தல்களில் அடைக்கப்பட்ட அசல் செம்பனை சமையல் எண்ணெய்க்கான உச்சவரம்பு விலை வரும் ஜூலை முதல் தேதி தொடங்கி அகற்றப்படுகிறது.

சந்தையில் உணவுப் பொருள்களின் விநியோகம் நிலைத்தன்மையுடன் இருப்பதையும் நீண்ட கால அடிப்படையில் பொருள்களின்  விலை  நிலைத்தன்மை பெறுவதை உறுதி செய்வதையும் நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

கோழியின் விலை சந்தையின் ஆற்றலுக்கேற்ப நிர்ணயிக்கப்படும். உதவித் தேவைப்படுவோருக்கு உதவித் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ரொக்க உதவித் தொகை வழங்கப்படும். உதவித் தொகை பெறுவோர் தொடர்பான தகவல்களை நிதியமைச்சு வழங்கும் என அவர் சொன்னார்.

கோழி உற்பத்தி துறை சேர்ந்தவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வுக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வரும் ஜூலை முதல் தேதி தொடங்கி அரசாங்கம் கோழிப் பண்ணையாளர்களுக்கு உதவித் தொகை வழங்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அண்மையில் கூறியிருந்தார்.

உதவித் தொகை நிறுத்தப்படுவதைத் தொடர்ந்து கோழியின் விலையை சந்தையின் தேவைக்கேற்ப நிர்ணயிக்க அரசாங்கம் ஒப்புதல் அளிக்கும் என தாங்கள் நம்புவதாக கோழி பண்ணை உரிமையாளர்கள் கூறியிருந்தனர்.


Pengarang :