ECONOMYNATIONAL

கடல்சார் அமலாக்க நிறுவன சோதனையில் ஏழு மியன்மார் பிரஜைகள் உள்பட ஒன்பது பேர் கைது

அலோர்ஸ்டார், ஜூன் 23– மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவன அதிகாரிகள் இம்மாதம் 18 ஆம் தேதி மேற்கொண்ட “ஓப் மூன்“ சோதனை நடவடிக்கையில் ஏழு மியன்மார் நாட்டினரும் இரு ஏஜெண்டுகளும் கைது செய்யப்பட்டனர்.

மலேசிய கடல் துறையின் லங்காவி பிரிவுடனான ஒத்துழைப்பின் வாயிலாக கிடைக்கப்பெற்ற உளவுத் தகவலின் அடிப்படையில் அந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவன கெடா மற்றும் பெர்லிஸ் மாநில இயக்குநர் லக்ஸமணா ரோம்லி முஸ்தாபா கூறினார்.

அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் 35 வயது ஆடவர் ஒருவர் 22 முதல் 40 வயது வரையிலான ஏழு மியன்மார் பிரஜைகளை வாகனம் ஒன்றின் மூலம் குவா படகுத் துறையில் கொண்டு வந்தார்.

அந்த அந்நியப் பிரஜைகள் பயணிகள் பெர்ரி படகு மூலம் கோல கெடா நோக்கி பயணமாகினர். தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அந்த படகை இடைமறித்த அதிகாரிகள் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர் என்றார் அவர்.

செல்லத்தக்கப் பயணப் பத்திரங்களைக் கொண்டிராத அவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக புக்கிட் மலுட் கடல்சார் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைதானவர்களை விடுவிக்கும் நோக்கில் கணிசமான லஞ்சப் பணத்துடன் கடல்சார் அமலாக்க நிறுவன அலுவலகத்திற்கு கடந்த 21 ஆம் தேதி வந்த சம்பந்தப்பட்ட ஏஜெண்டின் 26 வயது சகாவும் தடுத்து வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.


Pengarang :