ECONOMYNATIONAL

மே மாதம் விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது

கோலாலம்பூர், ஜூன் 24- மலேசியன் ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் கட்டுப்பாட்டிலுள்ள நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் இவ்வாண்டு மே மாதம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஈராண்டுகளில் இல்லாத அளவிற்கு பயணிகள் எண்ணிக்கை அபரிமித அதிகரிப்பைக் கண்டு 70 லட்சத்தை தாண்டியுள்ளதாக அந்நிறுவனம் கூறியது.

இவ்வாண்டில் அனைத்துலக மற்றும் உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை ஏறுமுகமாக உள்ளதாக அது பங்குச் சந்தை ஆணையத்திற்கு அளித்த தகவலில் அது தெரிவித்தது.

மலேசியா வரும் அனைத்துலகப் பயணிகள் எண்ணிக்கை உயர்வு கண்டு கடந்த மே மாதம் அதாவது நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு பத்து லட்சத்தைப் பதிவு செய்தது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு அட்டவணையிடப்பட்ட சேவையை வழங்கும் புதிய விமான நிறுவனமான லான்மேய் ஏர்லைன்ஸ் கடந்த மே 28 ஆம் தேதி தனது சேவையை தொடக்கியது. தொடக்கக் கட்டமாக வாரம் ஒரு முறையும் பின்னர் வாரம் ஏழு முறையும் அந்த விமான நிறுவனம் சேவையை வழங்கும்.

இது தவிர, இந்தியாவின் இண்டிகோ, ஜின் ஏர், ஸ்மைல் ஏர்வேய்ஸ், ரோயால் புருணை, பிலிப்பைன்ஸ் ஏர் ஆசிய ஆகிய நிறுவனங்கள் மே மாதம் முதல் மீண்டும் சேவையைத் தொடக்கியுள்ளதாக மலேசியன் ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் தெரிவித்தது.


Pengarang :