ECONOMY

அடையாளக் கார்டு காணாமல் போனதாக 73 பொய்ப் புகார்கள்- கோம்பாக் போலீஸ் தலைவர் அம்பலம்

கோலாலம்பூர், ஜூன் 24- அடையாளக் கார்டை தொலைத்தவர்கள் பலர் தேசிய பதிவுத் துறையினால் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக அந்த அடையாளப் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறி பொய்யான போலீஸ் புகாரை செய்கின்றனர்.

இவ்வாண்டு ஜனவரி தொடங்கி தற்போது வரை இத்தகைய 73 பொய்ப் புகார்களை 20 முதல் 40 வயது வரையிலான நபர்களிடமிருந்து தாங்கள் பெற்றுள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஜைனால் முகமது முகமது  கூறினார்.

தங்களின் அடையாளக் கார்டு கொள்ளையின் போது அல்லது வழிப்பறியில் பறிபோனதாக அவர்கள் பொய் கூறியது விசாரணையில்   தெரிய வந்தது. இத்தகைய பொய்ப் புகார் கூறியவர்களில் 71 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதர இரு சம்பவங்கள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் ஏசிபி பகாருடின் மாட் தாயிப் முன்னிலையில் இங்கு நடைபெற்ற வழக்குகளின் சாட்சிப் பொருள்களை அழிக்கும் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தங்களின் அடையாளப் பத்திரங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி பொதுமக்களுக்கு ஆலோசனை  கூறிய ஜைனால் முகமது, பொய்ப் புகார் செய்த குற்றத்திற்காக அபராதம் மட்டுமின்றி சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றார்.

இதனிடையே, இம்மாதம் 17 ஆம் தேதி முதல் கடந்த புதன் கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் லெஜாங் நடவடிக்கையில் கார் திருட்டுக் கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டதோடு 35 முதல் 62 வயது வரையிலான பத்து ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


Pengarang :