ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

இன்புளுயென்சா மாதிரி நோய் மலேசியாவில் கட்டுபாட்டில் உள்ளது

ரெம்பாவ், ஜூன் 26- இன்புளுயென்சா மாதிரியான நோய் (ஐ.எல்.ஐ.) பல தங்கும் வசதி கொண்ட பள்ளிகளில் அடையாளம் காணப்பட்ட போதிலும் அந்நோய் நாட்டில் தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இது அவ்வப்போது ஏற்படக்கூடிய வழக்கமான தொற்று நோய் என்பதால் பொது மக்கள் குறிப்பாக பெற்றோர்கள் இந்நோய் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று அவர் சொன்னார்.

நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அகற்றப்பட்டுள்ளதால் இந்த இன்புளுயென்சா நோய் அவ்வப்போது உயர்வு கண்டு வருகிறது. கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது உள்ளிட்ட பொது சுகதார நடவடிக்கைகளை நாம் குறைத்துள்ளோம். 

எது எப்படி இருப்பின், இந்நோய் கட்டுப்பாட்டில் உள்ளதால் பொது மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை. தொடர் கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்துதல் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தி விடலாம் என்றார் அவர். 

இந்நோய்ப் பரவல் காரணமாக பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் எழவில்லை எனக் கூறிய அவர், இச்சம்பவங்கள் தொடர்பில் மாவட்ட சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து இடர் மதிப்பீடுகளைச் செய்து வருகின்றனர் என்றார்.

அந்த இடர் மதிப்பீடுகளின் அடிப்படையில் அந்நோய் உயர்வு கண்டு வருவது கண்டறியப்பட்டால் சில முக்கிய நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், இன்புளுயென்சா அடிக்கடி வந்து போகக்கூடிய ஒரு பருவகால நோய் என்பதால் அது குறித்து அதிகம் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்றார் அவர்.


Pengarang :