ECONOMYSELANGOR

வசதி குறைந்தவர்களுக்கு உதவித் திட்டங்களை மேற்கொள்வதில் பெக்காவானிஸ் தீவிரம்

கோல லங்காட், ஜூன் 26- மகளிருக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் சிலாங்கூர் மாநில மகளிர் சமூக நல அமைப்பான பெக்கவானிஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மாநிலத்திலுள்ள 45 தொகுதிகளில் ஆண்டுதோறும் பல்வேறு திட்டங்களும் உதவிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைப்பின் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கூறினார்.

ஒவ்வொரு பண்டிகையின்  போதும் வசதி குறைந்தவர்களுக்கு உதவுவதற்காக இந்த அமைப்பின் வாயிலாக 196,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்கிறோம். இது தவிர, “மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்“ திட்டத்திற்காக 245,000 வெள்ளியைச் செலவிடுகிறோம் என அவர் சொன்னார்.

அதோடு மட்டுமின்றி, ஜியாரா மெடிக் திட்டத்திற்காக 208.000 வெள்ளி செலவிடப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 250 வெள்ளி வழங்கப்படுவதோடு தாதியர்கள் மூலம் அவர்களின் உடல்நிலையும் சோதிக்கப்படுகிறது என்றார் அவர்.

சமயப் பண்டிகைகள் மற்றும் மந்திரி புசார் இல்லத்தில் நடைபெறும் நிகழ்வு உள்பட நல்லிணக்க நிகழ்ச்சிகளுக்காக 77,000 வெள்ளி செலவிடப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள பந்தாய் மோரிப்பில் நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் ஒரு பகுதியாக இடம் பெற்ற விவாத நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் துணைவியருமான அவர் இதனைக் கூறினார்.


Pengarang :