ECONOMYSELANGOR

சமூக நலத் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் 15.7 கோடி வெள்ளி ஒதுக்கீடு-மந்திரி புசார் தகவல்

கோல லங்காட், ஜூன் 26– அதிகமான மாநில மக்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக குடும்ப சமூக நலத் தொகுப்பின் கீழ் மாநில அரசு ஆண்டுதோறும் 15 கோடியே 70 லட்சம் வெள்ளி வரை செலவிட்டு வருகிறது.

அத்தொகுப்பில் உள்ள திட்டங்களில் 60 கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டை உள்ளடக்கிய இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் (ஐ.எஸ்.பி.) திட்டமும் ஒன்றாகும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த ஐ.எஸ்.பி. உதவி தொகுப்பில் பல்வேறு திட்டங்கள் உள்ளடங்கியுள்ளன. பெருநாள் காலங்களில் ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்குவதற்காக 70 லட்சம் வெள்ளியைச் செலவிடுகிறோம். மேலும் நமது பிள்ளைகளின் எதிர்காலச் சேமிப்புக்காக இல்திஸாம் அனாக் சிலாங்கூர் திட்டத்தையும் அமல்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.

இது தவிர, எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட பேரங்காடிகளில் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு 100 வெள்ளி வழங்குகிறோம். இத்திட்டத்தின் கீழ் மரண சகாய நிதியும் வழங்கப்படுகிறது என அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள மோரிப் சதுக்கத்தில் ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் மந்திரி புசார் இவ்வாறு தெரிவித்தார்.

மாநில அரசின் குடும்ப நல உதவித் தொகுப்பின் கீழ் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்திற்கு 10 கோடியே 80 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்பு அமலில் இருந்த பெடுலி ராக்யாட் திட்டம் (ஐ.பி.ஆர்.) தற்போது பிங்காஸ் என்ற பெயரில் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இத்திட்டத்தின் கீழ் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொள்வதற்கு 60 கோடி வெள்ளியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.


Pengarang :