ECONOMYNATIONAL

 நாட்டில் வர்த்தகக் குற்றங்கள் சம்பந்தப்பட்ட 71,833 புகார்கள் பதிவு- வெ.520 கோடி வெள்ளி இழப்பு

ஜோகூர்பாரு, ஜூன் 26– நாட்டில் கடந்த 2020 ஜனவரி முதல் இவ்வாண்டு மே மாதம் வரை 520 கோடி வெள்ளியை உட்படுத்திய 71,833 வர்த்தகக் குற்றங்கள் தொடர்பான புகார்களை போலீசார் பெற்றுள்ளனர்.

அவற்றில் 68 விழுக்காடு அல்லது 48,850 புகார்கள் இணைய மோசடி சம்பந்தப்பட்டவையாகும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா கூறினார்.

இக்குற்றங்கள் தொடர்பில் அக்காலக் கட்டத்தில் 26,213 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இணைய மோசடிக்கு மக்கள் பலியாகமலிருப்பதை உறுதி செய்ய அதிக எண்ணிக்கையைப் பிரதிபலிக்கும் இச்சம்பவங்கள் மீது நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மோசடிப் பேர்வழிகள் மக்களைத் தங்கள் வலையில் விழச்செய்வதற்காக மேற்கொள்ளும் தந்திரங்கள் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு குறிப்பாக பெரு நிறுவனங்கள், மூத்த குடிமக்கள் மற்றும் பணியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவது அவசியமாகும் என அவர் சொன்னார்.

அரச மலேசிய போலீஸ் படையின் 2022 ஆம் ஆண்டிற்கான இணைய மோசடி எதிர்ப்பு இயக்கத்தை நேற்று இங்கு தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2020 இல் 8,851 ஆக இருந்த இணைய வர்த்தக மோசடி கடந்தாண்டில் 9,569 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாண்டு மே மாதம் வரை அந்த எண்ணிக்கை 3,833 ஆகப் பதிவாகியுள்து என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு பொது மக்களும் வணிகர்களும் இணைய வர்த்தக நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்ளத் தொடங்கியதைத் தொடர்ந்து இணைய மோசடி நடவடிக்கைகளும் அதிகரிப்பைக் கண்டுள்ளன என்று அவர் கூறினார்.


Pengarang :