ECONOMYSELANGOR

வெற்றியைத் தக்கவைக்க ஹராப்பான் தேர்தல் இயந்திரம் முடுக்கிவிடப்பட வேண்டும்- மந்திரி புசார் வலியுறுத்து

கோல லங்காட், ஜூன் 26- கடந்த 2008 ஆம் ஆண்டில் பெற்ற வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஏதுவாக பக்கத்தான் ஹராப்பான் இயந்திரம் தீவிரமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படாத போதிலும் செயலாக்கப் பணிகள் தீவிரப்படுத்தப்படுவது அவசியம் என்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவ மன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நடப்புச் சூழல் மிகவும் சவால்மிக்கதாக உள்ளது. நம்மை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற நமது எதிரிகள் காத்திருக்கின்றனர். நம்மை வீழ்த்தியவர்கள் நம்முடன் உறவு கொள்ள விழைகின்றனர்.

இம்மாநிலம் சிறப்பாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். செல்வ வளமிக்க மாநிலத்தை நிர்வகிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று மாநில மந்திரி புசாருமான அவர் குறிப்பிட்டார்.

எனினும், தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களின் தன்முனைப்பு மற்றும் ஆற்றல் காரணமாக அனைத்து சோதனைகளையும் கடந்த சிலாங்கூரை சோதனைகளைத் தாங்கும் மாநிலமாக உருவாக்க முடிந்துள்ளது என்றார் அவர்.

இங்குள்ள தெலுக் பங்ளிமா காராங் மண்டபத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஜெலாஜா பக்கத்தான் ஹராப்பான் சிலாங்கூரின் முகிபா விருந்து நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்கள் நலனில் அக்கறை காட்டி வரும் மாநில அரசு அவர்களின் நலன் கருதி சிலாங்கூர் சாரிங் எனும் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

தேசிய முன்னணி வசம் உள்ள மாநிலங்கள் உள்பட பல மாநிலங்கள் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவை அணுகி முட்டை விநியோகம் உள்ளிட்ட திட்டங்களை எவ்வாறு எளிதாக மேற்கொள்ள முடிகிறது என்று வினவியுள்ளன என்றார் அவர்.


Pengarang :