ECONOMYSELANGOR

அனுமதியின்றி வீடுகள் விரிவாக்கம்- 62 உரிமையாளர்கள் எம்.பி.ஏ.ஜே. நடவடிக்கை

ஷா ஆலம், ஜூன் 28– அம்பாங் பி.கே.என்.எஸ். ஏயு3 அடுக்குமாடி குடியிருப்பில் அனுமதியின்றி வீடுகளில் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டதற்காக அதன் உரிமையாளர்களுக்கு அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் 62 குற்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சாலை, வடிகால், கட்டிடச் சட்டத்தின் 72(1) பிரிவின் கீழ் கட்டிட மற்றும் கட்டிடக்கலை துறை இந்த குற்ற அறிக்கைகளை வெளியிட்டதாக நகராண்மைக் கழகத்தின் பொது உறவு அதிகாரி நேர்ஹயாத்தி அகமது கூறினார்.

கூட்டு நிர்வாக மன்றம் மற்றும் மாநில நில உரிமை விதிகளுக்கு புறம்பாக அந்த வீடுகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அந்த குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக விரிவாக்கம் செய்யப்பட்ட வீடு ஒன்றின் மீது கடந்த மே மாதம் 25 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக இச்சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றார் அவர்.

அரசாங்க நிலத்தில் நிரந்தர சுவர்கள், கூரைகள் மற்றும் வேலிகளை எழுப்பியது அக்குடியிருப்பாளர்கள் புரிந்த குற்றங்களில் அடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக எழுப்பப்பட்ட கட்டுமானங்களை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அகற்ற வேண்டும் என்பதோடு அதற்கு உண்டாகும் செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.


Pengarang :