ECONOMYSELANGOR

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வீடமைப்புத் திட்டத்தை பெற முயற்சி- ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூலை 1- மலேசிய தற்காப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீர்ர்களுக்கான 2 கோடியே 20 லட்சம் வெள்ளி மதிப்பிலான வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்வதற்காக போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக சுற்றுலாப் பயண முகவர் ஒருவர் மீது இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எனினும், நீதிபதி கமாருடின் கம்சுன் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சட்டுகளை 56 வயதான சுலைமான் அப்துல் ரசாக் என்ற அந்த சுற்றுலா முகவர் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதிக்கும் நவம்பர் 15 ஆம் தேதிக்கும் இடையே ஜாலான் பாடாங் தேம்பாக்கில் உள்ள மிண்டெப் தலைமையகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டது.

குற்றவாளி  என நிரூபிக்கப்பட்டால் இருபது ஆண்டு வரையிலானச் சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 471 மற்றும் 467 பிரிவுகளின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து ஐந்து லட்சம் வெள்ளி ஜாமீன் தொகை நிர்ணயிக்கும்படி அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜூலாய்க்கா முகமது அப்பாண்டி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

தனது கட்சிக்காரர் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதோடு குடும்பத்தினரையும் பராமரிக்கும் பொறுப்பில் உள்ளதால் குறைந்த ஜாமீன் தொகையை நிர்ணயிக்கும்படி சுலைமானின் வழக்கறிஞர் அடி ஜூல்கர்னாய்ன் ஜூல்கிப்ளி நீதிமன்றதைக் கேட்டுக் கொண்டார்.

சுலைமானை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 80,000 வெள்ளி ஜாமினில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி மாதம் ஒரு முறை அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.


Pengarang :