ECONOMYHEALTHSELANGOR

பலாக்கோங்கில் இலவச மருத்துவப் பரிசோதனை- 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஷா ஆலம், ஜூலை 4- செராஸ் 11வது மைல், கூடைப்பந்து அரங்கில் நேற்று நடைபெற்ற இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கு கொண்டனர்.

நேற்று  மாலை 3.00 மணி வரை இந்த பரிசோதனை இயக்கத்தின் வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை ஊக்கமூட்டும் வகையில் இருந்த தாக பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியு கீ கூறினார்.

அவர்களில் பெரும்பாலோர் முன்பதிவின்றி நேரடியாக இந்த மருத்துவ பரிசோதனைக்கு வந்தனர். ஐம்பது வயதுக்கும் மேற்பட்டவர்களே அதிகம் இந்த சோதனையில் பங்கு கொண்டனர். மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த அரிய வாய்ப்பினை நழுவ விட அவர்கள் தயாராக இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்க நேற்று முன்தினம் வரை 400 க்கும் மேற்பட்டோர் செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்திருந்தனர் என்றார் அவர்.

சுமார் 34 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள இந்த இலவச மருத்துவ இயக்கத்தின் வாயிலாக 39,000 பேர் வரை பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்டுகிறது.

நோய்ப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடல் பருமனானவர்கள் மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைபிடிக்காதவர்கள் இந்த மருத்துவ பரிசோதனை இயக்கத்தில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


Pengarang :