ECONOMYSELANGOR

இந்திய சமுதாயத்தின் சமூகப் பொருளாதார நிலையை வலுப்படுத்த சிறப்பு பிரிவு- மந்திரி புசார் தகவல்

கிள்ளான் ஜூலை 4– சிலாங்கூரிலுள்ள அனைத்து இந்திய சமூகம் சார்ந்த தொழில் முனைவோர் திட்டங்களும் மந்திரி  புசார் அலுவலகத்தில் உள்ள சிறப்பு பிரிவின் கீழ் ஒருங்கிணைக்கப்படும்.

இந்திய சமூகத்தின் குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரின் சமூக பொருளாதார நிலையை வலுப்படுத்துவதற்காக நடப்புத் திட்டங்களில் சில தரம் உயர்த்தப்பட்டு ஒருங்கிணைக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

அனைத்து தொழில் முனைவோரையும் ஒன்றிணைக்கும் வகையில் மலேசிய வர்த்தக சபையைப் போன்ற திட்டத்தை சிலாங்கூர்  கொண்டிருக்கும் என நம்புகிறேன். மலேசிய வர்த்தக சபை உயர்கல்விக் கூட நிலையில் இளையோருக்கு தொழில் முனைவோர் பயிற்சியை வழங்கி வருகிறது என்றார் அவர்.

இந்த திட்டத்தை சிறப்பான முறையில் அமல்படுத்த விரும்புகிறோம். வெறுமனே வர்த்தக உபகரணங்களை வழங்குவதையும் நிதியளிப்பதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டிருக்கவில்லை. மாறாக, அவர்களை பயிற்றுவிக்க விரும்புகிறோம்.

தொழில்முனைவோரியல் என்பது நடத்தை, சிந்தனை மற்றும் வர்த்தகத்தில் எவ்வாறு வெற்றி காண்பது என்ற நுட்பத்தை உள்ளடக்கியுள்ளது என அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள விண்ட்ஹாம் அக்மார் ஹோட்டலில் நடைபெற்ற இந்திய சமூகத்தின் மேம்பாட்டுத் திட்ட வடிவமைப்பு ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாநிலத்திலுள்ள 63 அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த 96  பேராளர்கள் கலந்து கொண்ட இந்த ஆய்வரங்கில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, ஜசெக தலைமைச் செயலாளர்  அந்தோணி லோக், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமிருடின், மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கு உணவுக் கூடைகளை வழங்குவது இனியும் சரியான தீர்வாக இருக்காது என்றும் கூறினார்.

வருமானக் குறைவே இந்திய சமூகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளதாக கருதுகிறேன். இத்தரப்பினருக்கு சுய கௌரவம் உள்ளதால் அதனை கட்டிக்காக்க வேண்டிய அவசியமும் உள்ளது. ஆகவே, அவர்களுக்கு இனியும் உணவுக் கூடைகளை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என்றார் அவர்.

இந்திய தொழில் முனைவோருக்கு பயிற்சிகள், வர்த்தக வழிகாட்டி மற்றும் வர்த்தக உபகரணங்கள் வழங்கும் சித்தம் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது.

மேலும், வர்த்தர்களின் தேவையின் அடிப்படையில் வர்த்தக உபகரணங்கள் வழங்கும் ஐ.சீட் திட்டத்திற்கு மாநில அரசு கடந்தாண்டு  ஏப்ரல் மாதம் 17 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்தது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :