ECONOMYSELANGOR

ஹிஜ்ரா கடனுதவி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்- பொது மக்களுக்கு எலிசபெத் வோங் வலியுறுத்து

செலாயாங், ஜூலை 4- வாழ்க்கையில் மேம்பாடு காண்பதற்கு ஏதுவாக மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள  கடனுதவித் திட்டத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி பொதுமக்களை புக்கிட் லஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் எலிசபெத் வோங் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் வாயிலாக வழங்கப்படும் கடனுதவி வாய்ப்புகளை பொது மக்கள் குறிப்பாக புக்கிட் லஞ்சான் தொகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் குறைந்த வட்டியில் 5,000 வெள்ளி வரையிலான கடனுதவியைப் பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம் என அவர் சொன்னார்.

வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் உதவ மாநில அரசு தயாராக உள்ளது. ஆகவே, இந்த வாய்ப்பினை தவற விட வேண்டாம் என அவர் கூறினார். இங்குள்ள தாமான் பிடாரா அடுக்குமாடி குடியிருப்பில் சோலார் விளக்குகளைப் பொருத்தும் திட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஹிஜ்ரா மூலம் கடனுதவி பெற்ற தொகுதியைச் சேர்ந்த பலர் அதன் வெற்றியை தம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர்  கூறினார்.

அவர்கள் வர்த்தகத்தை விரிவாக்குவதற்கு பத்தாயிரம் வெள்ளி வரை கடனுதவி பெற்றனர். இதனால் அவர்களின் வருமானமும் அதிகரித்தது. தற்போது அவர்கள் வெற்றிகரமான வர்த்தகர்களாக திகழ்கின்றனர் என்றார் அவர்.


Pengarang :