ECONOMYNATIONALSELANGOR

சிலாங்கூர்-நெகிரி செம்பிலான் எல்லை நிர்ணயம் மேம்பாட்டுப் பணிகளை எளிதாக்கும்- மந்திரி புசார்

சிப்பாங், ஜூலை 5- எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பில் சிலாங்கூரும் நெகிரி செம்பிலானும் செய்து கொண்ட ஒப்பந்தம் இரு மாநிலங்களில் மேம்பாட்டுப் பணிகளை எளிதாக்கும் என சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மொத்தம் 111.9 கிலோ மீட்டர் பகுதி அளவிடப்பட்டு  குறியிடும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதன் வழி எதிர்காலத்தில் இரு மாநில மக்களும் பொருளாதார வளர்ச்சியைக் காண்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் சொன்னார்.

இறைவன் அருளால் இன்னும் ஓரிரு நாட்களில் சிலாங்கூர் 1 திட்டத்தை நாம் தாக்கல் செய்யவிருக்கிறோம். நமது மேம்பாட்டு வழிமுறைகள் மற்றும் திட்டங்களை அதில் வரையறுக்கப்பட்டிருக்கும்.

விரிவான மேம்பாட்டிற்கு துல்லியமான மற்றும் சரியான திட்டங்களை வரைவதில் எல்லைகளை உறுதிப்படுத்தும் இப்பணி ஓரளவு துணை புரியும் என்றார் அவர்.

இங்குள்ள ஹோட்டல் சமா சமாவில் நடைபெற்ற தரை எல்லை தொடர்பில் சிலாங்கூருக்கும் நெகிரி செம்பிலானுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்கிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இரு மாநில எல்லைகளை அளவிட்டு குறியிடும் பணி கடந்த 2016 ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி தொடங்கி 2018 மார்ச் 17 ஆம் தேதி முற்றுப் பெற்றது.

தரை எல்லையை அளவிடும் பணி முற்றுப் பெற்ற போதிலும் கடல் எல்லையை நிர்ணயிப்பதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கையை இரு மாநிலங்களும் மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடும் சடங்களை எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் டத்தோஸ்ரீ தாக்கியுடின் ஹசான் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஸ்மாயில் அகமது ஆகியோர் பார்வையிட்டனர்.


Pengarang :