ECONOMYSELANGOR

சிலாங்கூர்- நெகிரி எல்லை நிர்ணயம் சிப்பாங், நீலாய், செமினி வளர்ச்சிக்கு துணை புரியும்

சிப்பாங், ஜூலை 5- இரு மாநில எல்லைகளை இறுதி செய்ய சிலாங்கூர் மற்றும்  நெகிரி செம்பிலான் மாநிலங்கள் மேற்கொண்ட நடவடிக்கையானது எல்லையில் உள்ள பகுதிகளின் துரித மேம்பாட்டிற்கு பெரிதும் துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய நகரங்களின் உருவாக்கத்தின் வாயிலாக இந்த மேம்பாடு கண்கூடாக காணமுடிவதோடு வட்டார மக்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் டத்தோஸ்ரீ தாக்கியுடன் ஹசான் கூறினார்.

எல்லைப்புற நகரங்களான சிப்பாங், செமினி மற்றும் நீலாயில் உருவாக்கப்படும் புதிய தொழில்பேட்டை மற்றும் நகரங்களை உதாரணமாக குறிப்பிடலாம். அப்பகுதிகளில் இறுதி செய்யப்பட்ட எல்லைப் பகுதி வரை மேம்பாட்டுப் பணிகளை விரிவு படுத்துவதற்குரிய வாய்ப்பு  இதன் மூலம் கிட்டும் என்றார் அவர்.

புதிய நகரங்களின் உருவாக்கத்தின் வாயிலாக வட்டார பொருளாதாரம் வளர்ச்சி கண்டு அதன் மூலம் வேலை வாய்ப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்குரிய சாத்தியமும் ஏற்படும் என்று அவர் சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற மாநில எல்லை நிர்ணயம் தொடர்பில் சிலாங்கூருக்கும் நெகிரி செம்பிலானுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மாநில எல்லைகளில் உள்ள பகுதிகளை மேம்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்பதால் மற்ற மாநிலங்களும் சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானை பின்பற்றி எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :