ECONOMYSELANGOR

ஹாஜ்ஜூப் பெருநாள் மலிவு விற்பனை- வெ.300,000 வருமானம் ஈட்ட பி.கே.பி.எஸ். இலக்கு

கோல லங்காட், ஜூலை 5- ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு நடத்தப்படும் ஏசான் விற்பனை விழாவின் வழி சுமார் மூன்று லட்சம் வெள்ளி வருமானம் ஈட்ட சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) இலக்கு நிர்ணயித்துள்ளது.

சிஜங்காங், தாமான் பெர்வீராவில் இன்று நடைபெற்ற முதல் நாள் மலிவு விற்பனைக்கு பொது மக்களிடமிருந்து கிடைத்த அமோக ஆதரவின் அடிப்படையில் இந்த இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பி.கே.பி.எஸ். சந்தை நிர்வாகி முகமது ஃபாஸிர் அப்துல் லத்திப் கூறினார்.

இந்த மலிவு விற்பனை ஐந்து இடங்களில் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் விற்பனைக்கு வைக்கப்படும் பொருள்களைப் பொறுத்து 55,000 வெள்ளி வரை வருமானம் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று பொது மக்களிடமிருந்து கிடைத்த ஆதரவின் காரணமாக சில பொருள்கள் கூடுதலாக வரவழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த இடத்தில் மட்டும் 40,000 வெள்ளி வரையில் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

இந்த மலிவு விற்பனையில் விற்கப்படும் தோட்டங்களிலிருந்து நேரடியாக தருவிக்கப்பட்ட காய்கறிகள் உள்ளிட்ட அடிப்படை உணவுப் பொருள்களை வாங்குவதற்குரிய அரிய வாய்ப்பினை நழுவ விட வேண்டாம் என பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த மலிவு விற்பனை புக்கிட் பெருந்தோங், தஞ்சோங் சிப்பாட், கோம்பாக், பாண்டான் இண்டா ஆகிய பகுதிகளில் வரும் 8 ஆம் தேதி வரை நடைபெறும்.


Pengarang :