ECONOMYSELANGOR

மாநிலத்தில் உணவு கையிருப்பை உறுதி செய்ய உற்பத்தி அதிகரிப்பு- பி.கே.பி.எஸ். தகவல்

கோல லங்காட், ஜூலை 6- சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) மாநிலத்தில் அடிப்படை உணவு விநியோகம் போதுமான அளவு இருப்பதை உறுதி செய்வதற்காக  உற்பத்தியை அதிகரித்துள்ளது.

கோழி, இறைச்சி மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களுடன் இணைந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சந்தையில் அதிகரித்து வரும் பொருட்களின் விலையினால் பொது  மக்கள் எதிர்நோக்கும் சிரமத்தைக் குறைக்க  இது உதவும் என்றும் அக்கழகத்தின்  தலைமை சந்தை நிர்வாகி முகமது  ஃபஸீர் அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

எங்களுக்குச் சொந்தமாக கோழி மற்றும் கால்நடைப் பண்ணைகளும்   செம்பனை தோட்டங்களும் உள்ளன. ஆகவே, பொருள் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு நாங்கள் எங்கள் சொந்த விவசாயப் பொருள்  உற்பத்தியை அதிகரிக்க  முனைப்புடன் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதனால்தான் நாங்கள்  உற்பத்தி நிறுவனங்களுடன் நேரடி ஒத்துழைப்பை நல்கி வருவதோடு அவர்கள் தங்கள் உற்பத்திப் பொருள்களை நேரடியாக எங்களிடம் விநியோகிப்பதற்கான ஏற்பாட்டையும் செய்துள்ளோம். மிக முக்கியமாக, இதில் இடைத்தரகர்கள் ஈடுபடுவதில்லை என்று அவர்  கூறினார்.

சிஜங்காங், தாமான் பெர்வீராவில் நடைபெற்ற மாநில அரசின் மலிவு விற்பனைத் திட்டத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மலிவு விற்பனைத் திட்டத்தின் மூலம் உற்பத்திப் பொருள்கள் மலிவாக சந்தைப்படுத்தப்படும் என்பதால்  சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் அதன் விலை குறித்து பயப்படத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் பொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மக்களின் சுமையை குறைக்க உதவும் வகையில் மாநிலம் முழுவதும் 64 இடங்களில் அடிப்படை பொருட்களை உள்ளடக்கிய மலிவு விற்பனைத் திட்டத்தை பி.கே.பி.எஸ். அறிமுகப்படுத்தியது.


Pengarang :