ECONOMYSELANGOR

பெருநாளைக் கொண்டாடுவதில் சிரமத்தை எதிர்நோக்குவோருக்கு உதவும் மலிவு விற்பனைத் திட்டம்

கோல லங்காட், ஜூலை 6– ஹாஜ்ஜூப் பெருநாள் சமயத்தில் மலிவு விற்பனைத் திட்டத்தை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாடு செய்துள்ளது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

சந்தையில் பொருள் விலை அபரிமித உயர்வு கண்டுள்ள நிலையில் பொது மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக இந்த இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக பொது மக்கள் கருத்து தெரிவித்தனர்.

நாட்டு மக்கள் குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் தொடர்ந்து நெருக்கடியில் சிக்கித் தவிப்பதை தவிர்க்கும் விதமாக மத்திய அரசும் இத்தகைய மலிவு விற்பனைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற அரசு ஊழியரான ஹூசைனி மர்சான் (வயது 79) கூறினார்.

பி.கே.பி.எஸ். மூலம் விற்கப்படும் பொருள்கள் மலிவாக இருப்பதோடு இதர சந்தைகளைக் காட்டிலும் புதிதாகவும் தரமானதாகவும் உள்ளதாக அவர் சொன்னார்.

அனைத்து பொருள்களும் விலையேற்றம் கண்டுள்ளது மக்களுக்கு பெரும் சுமையளிப்பதாக உள்ளது. முன்னாள் அரசு ஊழியர் என்ற முறையில் எனக்கு ஓய்வூதியம் கிடைப்பதால் ஓரளவு சமாளிக்க முடிகிறது. குறைந்த வருமானம் பெறும் பெரிய குடும்பங்களைக் கொண்டவர்களின் நிலை என்னவாகும்? என அவர் கேள்வியெழுப்பினார்.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்தின் கீழ் விற்கப்படும் பொருள்கள் இவ்வளவு குறைந்த விலையில் கிடைக்கும் எனத் தாம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று சுஸிலா பானோட் (வயது 47) கூறினார்.

இந்த மலிவு விற்பனைத் திட்டம் பொது மக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு பெரிதும் ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது என அவர் சொன்னார்.


Pengarang :