ECONOMYHEALTHNATIONAL

12 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு பின் இருதய நோயாளி முருகனுக்கு வெ.50,000 நிதியுதவி

கோல சிலாங்கூர் ஜூலை 6- மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கு உண்டான  செலவினத்தை சமாளிப்பதில் இருதய நோயாளி ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வந்த போராட்டம் மாநில அரசின் மருத்துவ உதவித் திட்டத்தின் வாயிலாக முடிவுக்கு வந்துள்ளது.

லோரி ஓட்டுநரான பி.முருகன் (வயது 64) என்ற அந்த நோயாளிக்கு இருதய சிகிச்சைத் திட்டத்தின் கீழ் 50,000 வெள்ளி நிதியுதவியை மாநில அரசு அங்கீகரித்துள்ளது.

கடந்த 2010, 2016 மற்றும்  2019 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டு இருதய அறுவை சிகிச்சைக்கு உண்டான 48,000 வெள்ளி கட்டணத்தைச் செலுத்த தாம் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிருபந்தம் ஏற்பட்டதாக ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையான முருகன் சொன்னார்.

மருத்துவ சிகிச்சைக்கான உதவி பெறுவோர் பட்டியலில் எனது பெயரும் இடம் பெற்றுள்ளது கண்டு நாம் பெரும் நிம்மதியடைந்தேன். இந்த நிதிக்கு கடந்தாண்டு நான் விண்ணப்பித்திருந்த நிலையில் இவ்வாண்டில்தான் அது அங்கீகரிக்கப்பட்டது என்று இங்குள்ள  தாமான் பெண்டஹாராவில் வசித்து வரும் அவர் குறிப்பிட்டார்.

இந்த உதவியை வழங்கிய மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். போதுமான நிதி இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்கும் மருந்து வாங்குவதற்கும் நான் பெரிதும் சிரமப் பட்டேன். லோரி ஓட்டுநர் தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளை ஈடு செய்யும் வகையில் இல்லை என்றார் அவர்.

கோல சிலாங்கூர் அரங்கில் இம்மாதம் 2 ஆம் தேதி நடைபெற்ற ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வின் போது மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடமிருந்து மருத்துவ உதவித் திட்ட நிதியைப் பெற்ற ஐவரில் முருகனும் ஒருவராவார்.


Pengarang :