ECONOMYSELANGOR

புக்கிட் பெருந்தோங்கில் ஒரு மணி நேரத்தில் 1,700 பாக்கெட் சமையல் எண்ணெய், 350 தட்டு முட்டை விற்பனை

உலு சிலாங்கூர், ஜூலை 6- ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு புக்கிட் பெருந்தோங்கில் இன்று நடத்தப்பட்ட மலிவு விற்பனையின் போது ஒரு மணி நேரத்தில் 1,700 பாக்கெட் சமையல் எண்ணெய் மற்றும் 350 தட்டு பி கிரேட் முட்டை விற்றுத் தீர்ந்தன.

சந்தையை விட குறைவான விலையில் விற்கப்பட்ட அவ்விரு உணவு மூலப் பொருள்களையும் முதலில் வந்த 300 வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றதாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) சந்தைப் பிரிவு தலைமை நிர்வாகி முகமது ஃபாஸிர் அப்துல் லத்திப் கூறினார்.

இந்த விற்பனை தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் சுமார் 300 வாடிக்கையாளர்கள் வருகை புரிந்தனர். இந்த விற்பனைக்கு கிடைத்த ஆதரவு ஊக்கமூட்டும் வகையில் இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

பாத்தாங் காலி தொகுதி நிலையிலான மலிவு விற்பனைத் திட்டத்தின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோழி விற்பனையும் ஊக்கமூட்டும் வகையில் இருந்ததாகக் கூறிய அவர், இரண்டு மணி நேரத்தில் 1,300 கோழிகள் விற்கப்பட்ட வேளையில் எஞ்சிய 700 கோழிகளும் முழுமையாக விற்கப்பட்டு விடும் எனத் தாங்கள் கருதுவதாகச் சொன்னார்.

ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஐந்து இடங்களில் நேற்று தொடங்கி தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு மலிவு விற்பனைத் திட்டத்தை பி.கே.பி.எஸ்.  நடத்தி வருகிறது.

நாளை தஞ்சோங் சிப்பாட், டத்தாரான் பத்து லாவுட்டிலும் வரும் 8 ஆம் தேதி தாமான் கோம்பாக் பெர்மாய் மற்றும் பண்டான் இண்டாவிலும் இந்த மலிவு விற்பனை நடைபெறும்.


Pengarang :