ECONOMYSELANGOR

விலைவாசி உயர்வை சமாளிக்க பி.கே.பி.எஸ். மலிவு விற்பனைத் திட்டம் துணை புரிகிறது- பொதுமக்கள் கருத்து

உலு சிலாங்கூர், ஜூலை 7– கோவிட்-19 பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் விலைவாசி உயர்வின் தாக்கத்தை எதிர்கொள்வதில் சிலாங்கூர் மாநில விவசாய கழகத்தின் மலிவு விற்பனைத் திட்டம் பெரிதும் புரிவதாக பொது மக்கள் கருத்து தெரிவித்தனர்.

கோழி உள்ளிட்ட சமையல் பொருள்களின் விலை உயர்வு பொருள்களை வாங்குவதா என ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வைப்பதாக பாதுகாவலரான இர்வான் முகமது (வயது 45) கூறினார்.

இர்வான் முகமது (வயது 45)

எனினும், புக்கிட் பெருந்தோங்கில் நடைபெற்ற மலிவு விற்பனைத் திட்டத்தில் குறைந்த விலையில் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு கிட்டியது குறித்து தாம் பெரிதும் மகிழ்ச்சியடைந்ததாக அவர் சொன்னார்.

இந்த விற்பனையில் நான் இரு கோழிகளை வாங்கினேன். எனினும் துரதிர்ஷ்டவசமாக பாக்கெட் சமையல் எண்ணையை வாங்க இயலாமல் போனது என்றார் அவர்.

இங்கு ஒரு கோழி 15.00 வெள்ளி விலையில் விற்கப்படுகிறது. இதனை வெளியில் வாங்கினால் 27.00 வெள்ளி தேவைப்படும் என்று அவர் சொன்னார்.

இந்த விற்பனைத் திட்டத்தின் வழி குறைந்த விலையில் அதிகப் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பு கிடைத்ததாக குடும்பத் தலைவியான விக்னேஸ்வரி (வயது 45) கூறினார்.

விக்னேஸ்வரி (வயது 45)

முன்பு 100 வெள்ளி வாங்கிய பொருள்களை இப்போது வாங்க 200 வெள்ளி வரை தேவைப்படுகிறது. இதுபோன்ற மலிவு விற்பனைத் திட்டங்கள் வாயிலாக செலவினத்தைக் குறைக்க முடிகிறது என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :