ANTARABANGSAECONOMYNATIONAL

போதைப் பொருள் கடத்தல்- கல்வாந்த் சிங்கிற்கு சிங்கையில் இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

சிங்கப்பூர், ஜூலை 7- போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மலேசியரான கல்வாந்த் சிங்கிற்கு சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவரது நல்லுடல் இன்று பின்னேரம் அவரின் சொந்த ஊரான கேமரன் மலைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வாந்த் சிங்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அவரின் வழக்கறிஞர் து ஷிங் ஜி பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.

இன்று நிறைவேற்றப்படுவதற்கு தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்த கல்வாந்த் சிங்கின் மரண தண்டனையை நிறுத்துவதற்கு கடைசி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை மேல் முறையீட்டு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக 32 வயதான கல்வாந்த் சிங்கிற்கு சிங்கை உயர் நீதிமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி தூக்குத் தண்டனை விதித்தது.

அவருக்கு எதிரான மரண தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் அதே ஆண்டில் மறுவுறுதிப்படுத்தியது.

கேமரன் மலையைச் சேர்ந்தவரான கல்வாந்த் 60.15 கிராம் டயாமோர்பின் மற்றும் 120.9 கிராம் போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தாம் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டது மற்றும் தண்டனை விதிக்கப்பட்டதை மறுஆய்வு செய்யவும் தண்டனையை நிறுத்தி வைக்கவும் கோரி அவர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அவரது அந்த மனுவை தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் மற்றும் நீதிபதி ஆண்ட்ரூ பாங் பூன் லியோங், நீதிபதி தாய் யோங் வாங் ஆகியோரடங்கிய அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது.


Pengarang :