ECONOMYSELANGOR

பி.ஜே.டி.லிங்க் சாலைத் திட்டம்- மதிப்பீட்டு அறிக்கையை மாநில அரசு இன்னும் பெறவில்லை

ஷா ஆலம், ஜூலை 8- பி.ஜே.டி. லிங்க் எனப்படும் பெட்டாலிங் ஜெயா போக்குவரத்து தணிப்பு அடுக்குச் சாலைத் திட்டம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை மாநில அரசு இன்னும் பெறவில்லை.

அந்த நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பில் மாநில அரசுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளில் மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிப்பதும் ஒன்றாகும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

நெடுஞ்சாலைத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்னர் சுற்றுச்சூழல் விளைவுகள் மீதான மதிப்பீடு, சமூக விளைவுகள் மீதான மதிப்பீடு மற்றும் போக்குவரத்து விளைவுகள் மீதான மதிப்பீட்டு அறிக்கைகளை சம்பந்தப்பட்ட மேம்பாட்டு நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இன்று வரை பி.ஜே.டி.லிங்க் தொடர்பான எந்த அறிக்கையையும் மாநில அரசு பெறவில்லை என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறினார்.

இந்த நெடுஞ்சாலைத் திட்டம் தொடர்பில் பொது மக்கள் சரியான தரப்பிடமிருந்து தகவல்களைப் பெற வேண்டுமே தவிர உண்மையற்ற தகவல்களை நம்பி கருத்துரைக்க கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மாநில அரசு கொள்கையளவில் ஒப்புக் கொண்ட பி.ஜே.டி. லிங்க் நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50 பெட்டாலிங் ஜெயா வட்டார குடியிருப்பாளர்கள் கடந்த 2 ஆம் தேதி  ஜாலான் புரோப். கூ காய் கிம் சாலையில் ஆட்சேப மறியலில் ஈடுபட்டனர்.

இந்த உத்தேச நெடுஞ்சாலைத் திட்டத்தை மாநில அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு ரத்து செய்தது. எனினும், சில மாதங்களுக்கு முன்னர் அத்திட்டத்திற்கு மீண்டும் ஒப்புதல் வழங்கப்பட்டது.


Pengarang :