ECONOMYNATIONAL

பி.கே.ஆர். தேர்தல்- அதிகாரப்பூர்வ முடிவை மத்திய தலைமைத்துவ மன்றம் அங்கீகரித்தது

கோலாலம்பூர், ஜூலை 8– பி.கே.ஆர். கட்சியின் தேர்தல் குழு அறிவித்த 2022 ஆம் ஆண்டிற்கான தேர்தல் முடிவுகளை கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றம் (எம்.பி.பி.) அங்கீகரித்தது.

தேர்தலுக்கான “அடில்“ செயலியை உருவாக்கிய சேவை வழங்குநர்களின் அறிக்கை மற்றும் தேர்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட தடயவியல் தணிக்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை நேற்று கூடிய எம்.பி.பி. ஆய்வு செய்ததாக கட்சியின் தொடர்பு பிரிவு இயக்குநர் ஃபாமி  பாட்சில் கூறினார்.

தேர்தல் முறையின் அமலாக்க நிலையில் காணப்படும் பலவீனங்களை களைவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தணிக்கை நிறுவனம் எம்.பி.பி.க்கு முழு விளக்கம் கொடுத்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் தேர்தல் குழு அறிவித்த 2022 ஆம் ஆண்டிற்கான தேர்தல் முடிவுகளை எம்.பி.பி. அங்கீகரித்தது என அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் தொடர்பில் பெறப்பட்ட 1,800 புகார்களில் சில இன்னும் ஆய்வுக்குள் படுத்தப்பட்டுள்ளதோடு நிலுவையில் இருக்கும் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்  என்ற தேர்தல் குழுவின் விளக்கத்தையும் எம்.பி.பி. கவனத்தில்  கொண்டுள்ளது என்றார் அவர்.

இதனிடையே, பி.கே.ஆர். கட்சியின் பேராளர் மாநாடு திட்டமிட்டபடி வரும் ஜூலை 15 முதல் 17 வரை ஷா ஆலம் ஐடியல் மாநாட்டு மையத்தில் (ஐ.டி.சி.சி.)  நடைபெறும் என்றத் தகவலையும் ஃபாமி வெளியிட்டார்.


Pengarang :