MEDIA STATEMENTNATIONAL

ஹாஜி புனிதப் யாத்திரை மோசடி- இரு பெண்கள் உள்பட ஐவர் கைது

கோலாலம்பூர், ஜூலை 10- ஹாஜி புனிதப் யாத்திரை மற்றும் நடைமுறையில் இல்லாத விசா திட்ட மோசடியில் ஈடுபட்டது தொடர்பில் இரு பெண்கள் உள்பட ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த மோசடிக் கும்பலை நம்பி பணத்தைச் செலுத்திய சுமார் 400 ஹாஜி யாத்ரீகர்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் கடந்த வியாழக்கிழமை கோலாலம்பூர்  அனைத்துல விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டனர்.

மொத்தம் 683,500 வெள்ளி மதிப்பிலான இந்த புனித யாத்திரைத்  திட்ட மோசடி தொடர்பில் 18 பேரிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து 28 முதல் 50 வயது வரையிலான அந்த ஐவரும் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸ்ஹாரி அபு சமா கூறினார்.

இந்த புனித யாத்திரை மோசடி தொடர்பில் புதிதாக மேலும் ஒரு புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து வங்சா மாஜூ போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப்புலனாய்வுப் பிரிவு குற்றவியல் சட்டத்தின் 420 பிரிவின் கீழ் மேலும் ஒரு விசாரணையைத் தொடக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தாபோங் ஹாஜி வாயிலாக அல்லாமல் ஃபாரூடா எனப்படும் விசா முறையின் கீழ் மெக்காவுக்கு புனித ஹாஜி யாத்திரையை ஏற்பாடு செய்த பயண நிறுவனத்திடம் பணம் செலுத்திய 380 யாத்ரீகர்கள்  பயணத்தை மேற்கொள்ள இயலாமல் விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டனர்.


Pengarang :