ANTARABANGSAECONOMY

அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் அடுத்த வாரம் புதிய அதிபர் நியமனம்

கொழும்பு, ஜூலை 12- இலங்கையின் புதிய அதிபரை அந்நாட்டு நாடாளுமன்றம் இம்மாதம் 20 ஆம் தேதி தேர்ந்தெடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் கூறினார்.

இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக அந்நாட்டு மக்கள் வெகுண்டெழுந்து அதிபர் மற்றும் பிரதமர் வீடுகளை முற்றுகையிட்டு சூறையாடியதைத் தொடர்ந்து அவ்விருத் தலைவர்களும் தங்கள் பதவிகளைத் துறந்துள்ளனர்.

இலங்கையின் தற்காப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தமிழ்த் தாயகத்திற்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை கொடூரமான முறையில் அழித்த அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த புதன் கிழமை தனது அதிபர் பதவியைத் துறந்தார். அந்நாட்டில் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து ராஜபக்சேயின் சகோதரர்களும் உறவினர்களும் அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அந்த தீவு நாடு கடந்த 1948 ஆம் ஆண்டில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றப்  பின்னர் இவ்வளவு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குவது இதுவே முதன் முறையாகும்.

வரும் வெள்ளிக் கிழமை கூடவிருக்கும் நாடாளுமன்றம் ஐந்து நாட்களுக்குப் பின்னர் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை நடத்தும் என்று சபாநாயகர் மகிந்தா யாப்பா அபேவார்டனா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கேற்ப அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய புதிய அரசாங்கம் உருவாக்கப்படுவது அவசியம் என்று நேற்று நடைபெற்ற அனைத்துத் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஏதுவாக பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் பதவியை துறக்க தயாராக உள்ளதாக ஆளும் கட்சி கூறியிருந்தது.


Pengarang :