ECONOMYNATIONAL

காய்கறி, பழங்களின் விலை 30 விழுக்காடு உயர்வு- பொதுமக்கள் அதிருப்தி

ஷா ஆலம், ஜூலை 12- காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை கடந்த இரு வாரத்தில் குறிப்பாக பெருநாள் காலத்தில் 20 முதல் 30 விழுக்காடு வரை அபரிமித உயர்வு கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிளகாய் மற்றும் வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்வு கண்டது பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக  ஸ்ரீ கெம்பாங்கான் மார்க்கெட் வியாபாரியான நோர் சுஹாய்ல் சுஹாய்மி (வயது 48) கூறினார்.

முன்பு கிலோ 24.00 வெள்ளி விலையில் விற்று வந்த சிலி கம்போங் வகை மிளகாய் தற்போது கிலோ 28.00 வெள்ளி முதல் 30.00 வெள்ளி வரை உயர்வு கண்டுள்ளதாக அவர் சொன்னார்.

பொதுவாக இரண்டு அல்லது மூன்று வெள்ளி அளவில் இப்பொருள்களை வாங்குவோர் விலையேற்றத்தை அவ்வளவாக உணரவில்லை. அதிக எண்ணிக்கையில் வாங்குவோர் இந்த விலையேற்றத்தினால் சினமடைந்து நாங்கள் (வியாபாரிகள்) வேண்டுமென்றே விலையை உயர்த்துவதாக குற்றஞ்சாட்டுகின்றனர் என்றார் அவர்.

இருந்த போதிலும், நிலைமையை உணர்ந்துள்ளனர். பொருள்களின் விலையேற்றமும் வீழ்ச்சியும் நிலையற்றதாக உள்ளது. எங்களைப் போன்ற சிறு வணிகர்கள் மொத்த வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலையை சார்ந்திருக்கிறோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்பு கிலோ வெ.3.50 விலையில் விற்று வந்த தங்காளி மற்றும் வெள்ளரி போன்ற காய்கறிகள்  போக்குவரத்து செலவின அதிகரிப்பு காரணமாக தற்போது வெ.7.00 வரை உயர்ந்துள்ளதாக எரின் என்ற வர்த்தகர் கூறினார்.


Pengarang :