ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா ஜூலை 18இல் நாடாளுமன்றத்தில் தாக்கல்

கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா ஜூலை 18இல் நாடாளுமன்றத்தில் தாக்கல்

 

கோலாலம்பூர், ஜூலை 13- நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதை தடுப்பதற்கு ஏதுவாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா இறுதி செய்யப்பட்டு விட்டதோடு இம்மாதம் 18 ஆம் தேதி அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இன்று கூடிய இவ்விவகாரம் மீதான நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழு இந்த தேதியை முடிவு செய்ததாக  நாடாளுன்றம் மற்றும் சட்ட விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜூனைடி வான் ஜாபர் கூறினார்.

நாடாளுமன்ற சபாநாயகரின் விவேகத்திற்குட்பட்டு இவ்விவகாரம் மீது வரும் ஜூலை 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் விவாதம் நடத்துவதற்கும் அக்குழு பரிந்துரைத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டம் (திருத்தம்)(எண்3) மசோதா 2022, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதை தடுக்க வகை செய்யும் மசோதா மற்றும் நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் அறிக்கை வரும் 18ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

மேலும், சட்டவிவகாரப் பிரிவு மற்றும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துடன் வரும் ஜூலை 25 ஆம் தேதி ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரும் 26 ஆம் தேதி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்திப்பு நடத்துவதற்கும் அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

செனட்டர்களுடனான உத்தேச சந்திப்பு வரும் ஆகஸ்டு 8ஆம் தேதி நடைபெறும். அம்மசோதா மேலவையில் வரும் ஆகஸ்டு 9ஆம் தேதி முதல் வாசிப்புக்கும் ஆகஸ்டு 10 ஆம் தேதி இரண்டாம் வாசிப்புக்கும் விடப்படும்.

இந்த மசோதா மக்களவை மற்றும்  மேலவையில் நிறைவேற்றப்பட்டப் பின்னர்  ஒப்புதலுக்காக வரும் ஆகஸ்டு 11 முதல் 26 ஆம் தேதிக்குள் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஆகஸ்டு 29 தொடங்கி செப்டம்பர் 2 க்குள்ள அரசு பதிவேட்டில் இடம் பெறும் என்று வான் ஜூனைடி தெரிவித்தார்.


Pengarang :